இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலய நிகழ்வு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைய, ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் இந்த பொசன் வலய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி, கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரரின் தலைமையில் சமய வழிபாடுகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டல்களும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, பொசன் வலயத்தைத் திறந்து வைப்பதற்கான செய்தியடங்கிய பெட்டகத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், பொசன் வலயத்தை நேற்று (28) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த ஆரம்ப நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
சாரணர் இயக்கத்தைப் பாடசாலைக் கட்டமைப்பினுள் மேலும் விரிவுபடுத்துவது மிகவும் அவசியமானது என்றும், இவ்வாறான சமய மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் ஊடாக சமூகத்திற்குச் செய்யப்படும் சேவைகளைத் தாம் பெரிதும் மதிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பொசன் வலயமானது ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களிலும் மாலை 6.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
அதற்கமைய, கொழும்பு 02, சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை சாரணர் தலைமையக வளாகம் உள்ளிட்ட, லேக்ஹவுஸ் வட்டத்திலிருந்து இலங்கை பொலிஸ் தலைமையகம் வரையிலான எல்லைக்குள் இந்த பொசன் வலய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.


