Thursday, July 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்காக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்து நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு உள்ளிட்ட அமைச்சின் விடயப்பரப்பிற்குட்பட்ட அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து இதன் போது தனித்தனியாக கலந்துரையாடப்பட்டது.

வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே விடயப்பரப்புடன் தொடர்புடைய பல நிறுவனங்கள் காணப்படுவதன் காரணமாக, திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயற்திறனின்மை ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோன்று பல வருடங்களுக்கு முன்னர் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக நிறுவப்பட்ட நிறுவனங்களை மேலும் பராமரித்துச் செல்வதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதல் நிதிச் சுமையை சுமக்க வேண்டியேற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறான உற்பத்தித்திறனற்ற அனைத்து நிறுவனங்களையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.

அத்துடன், கண்டி – வடக்கு ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம், கொழும்பு பெரும்பாக கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம், அம்பத்தலே நீர் வழங்கல் திட்டம், அநுராதபுரம் – வடக்கு நீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட பிரதான நீர் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, நாடளாவிய ரீதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, வரலாற்றில் ஒதுக்கப்படும் அதிகூடிய வரவுசெலவுத் திட்ட நிதியை 2027ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மீள்குடியேற்ற வேலைத்திட்டம் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்துமாறும், குறைந்த வருமானம் உடையவர்களின் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அரசாங்கத்தின் வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமான “தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை” என்பதன் முன்னேற்றம் மற்றும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வலுசக்தி அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments