அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் தலையீடு செய்வதற்கான அறிகுறிகள் குறித்து கனேடிய அரசியல்வாதிகளை அமெரிக்க அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் கடந்த ஆண்டு வெளியிட்ட அரசியல் விளம்பரம், அமெரிக்க அரசியலில் தலையீடாகக் கருதப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன், இறக்குமதி வரிகளை விமர்சித்துப் பேசிய காட்சிகளையும் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த கருத்துகளையும் பயன்படுத்தி ஒன்ராறியோ வெளியிட்ட விளம்பரத்தைத் தொடர்ந்து, 2025 ஒக்டோபரில் கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தியிருந்தார்.
இதற்கிடையில், கனடா அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற வேண்டும் என்ற தனது கருத்தையும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் பால் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கனடாவின் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் அண்மைய கருத்துகளையும் ஹோக்ஸ்ட்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் உள்விவகாரங்களில் கனேடிய அரசியல்வாதிகள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க அரசியலில் தலையிட வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் நுகர்வோர் விலைகளை உயர்த்துவதுடன், நீண்டகால நட்பு நாடான கனடாவுடனான உறவுகளையும் பாதிப்பதாக ட்ரூடோ விமர்சித்துள்ளார்.


