வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்கான செலவு அதிகரிக்கவுள்ளது.
கனடா தபால் சேவையின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில், தபால் முத்திரைகளின் கட்டணத்தை உயர்த்தக் கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது 1.44 டொலராக உள்ள ஒரு தபால் முத்திரையின் விலை, 2027 ஆம் ஆண்டில் 2 டொலராக உயர்த்தப்படும். 2027 ஆம் ஆண்டிற்குப் பிறகும், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆண்டுதோறும் 7 சதவீதக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கட்டண உயர்வால் நுகர்வோருக்கு ஆண்டுக்குச் சுமார் 6 டொலர்களும், சிறு வணிகர்களுக்கு ஆண்டுக்குச் சுமார் 9 டொலர்களும் மட்டுமே மேலதிகச் செலவாகும் என்பதால், இது நுகர்வோரை பெரியளவில் பாதிக்காது என வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தபால் முத்திரைக் கட்டணங்களுக்கு ஈடாகக் கனடாவின் கட்டணங்களை சீரமைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கடிதப் போக்குவரத்து மற்றும் வணிக அஞ்சல்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வருவதே இந்த விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும். 2006 ஆம் ஆண்டில் 5.5 பில்லியனாக இருந்த உள்நாட்டுக் கடிதங்களின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்ட ஆண்டறிக்கையின்படி 2 பில்லியனாகக் குறைந்துள்ளது.


