Thursday, October 29, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல்

கனடாவின் மனிடோபா மாகாணம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் நிலையில், வின்னிபெக் நகரில் முன்கூட்டிய வாக்குப்பதிவில் சாதனை பதிவாகியுள்ளது.

மனிடோபா மாகாணத்தில் 130-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் புதன்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது. இதில் மேயர்கள், நகராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அறங்காவலர்களைத் தெரிவுசெய்வதற்காக மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

வின்னிபெக் நகர உள்ளாட்சித் தேர்தலில் முன்கூட்டியே மொத்தம் 50,767 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது 2022ஆம் ஆண்டு பதிவான முன்கூட்டிய வாக்குப்பதிவு சாதனையை விட 21.2 சதவீதம் அதிகமாகும்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வின்னிபெக் வாக்காளர் அலெக்சாண்டர் ஹ்ரின்ட்ஜியோ (Alexander Hryndzio), இம்முறை ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், தேர்தல் முடிவுகளில் வாக்குகள் பல்வேறு வேட்பாளர்களிடையே பிரியக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வின்னிபெக் நகர மேயர் பதவிக்காக தற்போதைய மேயர் ஸ்கொட் கில்லிங்ஹாம் (Scott Gillingham) மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் கெவின் க்ளைன் (Kevin Klein) உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மேலும், நகரின் 15 நகரசபை வட்டாரங்களுக்கான பிரதிநிதிகளையும், பல்வேறு பாடசாலைப் பிரிவுகளுக்கான அறங்காவலர்களையும் தெரிவுசெய்வதற்கும் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, வீடமைப்பு, வாழ்க்கைச் செலவு, வீடற்றோர் பிரச்சினை மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவை முக்கிய பேசுபொருட்களாக உருவெடுத்துள்ளன.

கனடா முழுவதும் தேர்தல்களில் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், மனிடோபா மாகாணத்தின் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments