இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவரான “கஞ்சிபானை இம்ரான்” என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் என்பவரின் நெருங்கிய நண்பனான மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
“கஞ்சிபானை இம்ரான்” என்பவரின் நெருங்கிய நண்பனான மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் விசா மற்றும் கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் இன்றைய தினம் அதிகாலை 02.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அவரை கைதுசெய்துள்ளனர்.
மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவரின் மனைவியும் பிள்ளைகளும் இந்தியாவில் உள்ள நிலையில் அவர்களிடம் செல்லுபடியாகும் விசா மற்றும் கடவுச்சீட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவர் 2017 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வேளையில் பொலிஸ் பாதுகாப்பை மீறி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹஷ்ராட் என்பவரை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


