Monday, October 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஒன்ராறியோவில் அதிகரிக்கும் வீடற்றோர் நெருக்கடி

ஒன்ராறியோவில் அதிகரிக்கும் வீடற்றோர் நெருக்கடி

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வீடற்றோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வீடமைப்பு, மனநலச் சேவைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான சேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் நகரசபைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவாகும் மேயர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினைகளில் வீடற்றோர் நெருக்கடியும் ஒன்றாகும்.

ஒன்ராறியோ நகராட்சிகள் சங்கம் (AMO) கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி, மாகாணம் வீடற்றோர் நெருக்கடியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த ஆய்வின்படி, 2024ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் சுமார் 80,000 பேர் வீடற்றவர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் சுமார் 85,000 ஆக அதிகரித்துள்ளது. எதிர்வரும் காலங்களிலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஒன்ராறியோ போன்ற செல்வச் செழிப்பான மாகாணத்தில் 85,000 பேர் வீடற்றவர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என ஒன்ராறியோ நகராட்சிகள் சங்கத்தின் தலைவர் ரைலி ப்ரொக்கிங்டன் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் வீடற்றவர்களாக உள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆறு மாதங்களுக்கும் மேலாக வீடின்றி வாழ்ந்து வருவதாகவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒன்ராறியோவிலுள்ள பெரும்பாலான நகராட்சிகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதுடன், வீடற்றோர் தொடர்பான செலவுகள் அவற்றின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ப்ரொக்கிங்டன் தெரிவித்துள்ளார்.

நகராட்சிகளால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஏற்படுத்த முடியாத நிலை காணப்படுவதால், இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பது மேலும் கடினமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத் தீர்வுகாண மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் நிலையான நீண்டகால நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளில் 11 பில்லியன் டொலர் நிதி கோரிக்கை!

வீடற்றோர் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்காக, அடுத்த 10 ஆண்டுகளில் 11 பில்லியன் டொலர்களை ஒதுக்குமாறு ஒன்ராறியோ நகராட்சிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிதியின் மூலம் 75,000 பேருக்கு ஆதரவுடன் கூடிய வீடுகள், இடைக்காலத் தங்குமிடங்கள் மற்றும் சமூக வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடற்ற நிலையைத் தடுக்கும் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், வீடற்றோர் முகாம்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக எட்டு ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டொலர்களை ஒதுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒன்ராறியோ முழுவதும் சுமார் 2,000 வீடற்றோர் முகாம்கள் காணப்பட்டதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரிய நகரங்கள் மட்டுமன்றி, தங்குமிட வசதிகள்கூட இல்லாத சிறிய நகரங்களிலும் இவ்வாறான முகாம்கள் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்குவது அவசியமானது என்றாலும், அதற்கான செலவுச் சுமையை நகராட்சிகள் மாத்திரம் ஏற்க முடியாது என ப்ரொக்கிங்டன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments