ஐநா- வின் ‘திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவில்’ (Committee for Programme and Coordination) ஈரான் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்ப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
“ஈரான் ஆட்சியின் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், ஐநா மேற்பார்வைக் குழு ஒன்றின் பொறுப்புகளுக்கு முரணானவை” என்று ஐநா-விற்கான கனடா தூதுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐநா பொதுச் சபையில் நேற்று(11) நடைபெற்ற வாக்கெடுப்பில், ஐநா-வின் திட்டங்களை மறுஆய்வு செய்யும் பொறுப்பைக் கொண்ட இந்தக் குழுவின் உறுப்பினராக ஈரான் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வாக்களித்த 183 நாடுகளில், 144 நாடுகள் ஈரானை இந்தக் குழுவின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு உறுப்பினர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்க ஆதரவாக வாக்களித்தன.


