Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எபோலா, மூளைக்காய்ச்சல் குறித்து சுகாதார துறையின் அறிவித்தல்

எபோலா, மூளைக்காய்ச்சல் குறித்து சுகாதார துறையின் அறிவித்தல்

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் இலங்கையில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமைகள் குறித்து சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், எபோலா வைரஸ் பரவல் குறித்து தொற்றுநோயியல் பிரிவு விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், அது தொடர்பான அவசியமான வழிகாட்டல்கள் சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சில ஆபிரிக்க நாடுகளில் தான் இந்த எபோலா வைரஸ் முதலில் ஆரம்பமானது. அதன் பின்னர் உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு அவசரகால நிலைமையாக அறிவித்தது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இது குறித்து தொடர்ச்சியாக அவதானம் செலுத்திஇ நமது சுகாதாரக் கட்டமைப்புக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதற்கமைய தற்போதும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த நாட்களில் நாட்டில் பதிவான மெனிஞ்சைடிஸ் நோய் நிலைமை குறித்து  கண்டறியப்பட்ட முதல் நாளில் இருந்தே அவதானம் செலுத்தி அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த நாட்களில் நடைபெற்ற வெசாக் தானங்களின்போது, தேநீர் போன்ற சூடான பானங்களை வழங்குமாறு நாம் அறிவுறுத்தியதற்கும் இதுவே காரணமாகும்.

ஏனெனில், ஏதேனும் ஒரு வழியில் மெனிஞ்சைடிஸ் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்பட்டன. எனினும், தற்போது ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினரால் முடிந்துள்ளது.

இந்தளவுக்கு இந்நோய் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், இதனை எவரும் சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது. குறிப்பாக இக்குறிப்பிட்ட நோய் நிலைமை சிறுவர்கள் மத்தியிலேயே காணப்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நோயை மேலும் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments