Wednesday, September 23, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்தியாவில் 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

இந்தியாவில் 5 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மாத்திரம் வேலை நடைமுறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பழைய தனியார் வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள சுமார் ஒரு இலட்சம் வங்கி கிளைகளில் பணியாற்றும் சுமார் 8 இலட்சம் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைநிறுத்தம் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 26 மற்றும் 27ஆம் திகதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் உள்ளிட்ட வழக்கமான வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். சேவைகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் வேலை நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் சி. எச். வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments