Sunday, June 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு துப்பாக்கி கடத்தல்: 13 பேர் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு துப்பாக்கி கடத்தல்: 13 பேர் மீது குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்திலிருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகளைக் கடத்திய விவகாரத்தில் 13 பேர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சர்வதேச அளவில் இயங்கி வந்த இந்த கடத்தல் கும்பலின் துப்பாக்கிகள், கனடாவில் நடந்த கடத்தல் மற்றும் கொலை முயற்சி போன்ற குற்றச்செயல் இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

நியூ ஹாம்ப்ஷயர் மாநில சட்டத்தரணி எரின் கிரீகன் இந்த தகவலை வெளியிட்டார்.

நியூயார்க்கில் உள்ள அக்வெசாஸ்னே (Akwesasne) பழங்குடியின பாதுகாப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள், எல்லைப் பகுதிகளைச் சாதகமாகப் பயன்படுத்தி துப்பாக்கிகளைக் கடத்தியுள்ளனர்.

இவர்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் மூன்றாம் நபர்கள் மூலம் சட்டப்பூர்வமான விற்பனையாளர்களிடம் இருந்து துப்பாக்கிகளை வாங்கி, பின்னர் அவற்றை எல்லை தாண்டி கனடாவிற்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்தக் கடத்தல் கும்பலில் தொடர்புடைய ஜஸ்டின் ஜாக்சன் உட்பட 5 பேர் ஏற்கனவே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவர்களுடன் அக்வெசாஸ்னே பழங்குடியினத்தைச் சேர்ந்த மேலும் 8 பேர் மீது இந்த மாத தொடக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் நால்வர் தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் ஜொனாதன் ஹார்ட், ஐயோ-ரதேகா ஸ்வாம்ப் மற்றும் பிளேட் ஓக்ஸ் ஆகிய மூவர் தலைமறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் 51 துப்பாக்கிகள் இந்த கும்பல் மூலம் கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதில் பல துப்பாக்கிகள் கனடாவில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஒரு கடத்தல் சம்பவம் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கின் இடங்களில் இந்தத் துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கனடாவில் ஆண்டுதோறும் சுமார் 17,000 முதல் 20,000 துப்பாக்கிகள் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டு மீட்கப்படுகின்றன.

இதில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவை. கனடாவின் முக்கிய நகரங்களில் மீட்கப்படும் கைத்துப்பாக்கிகளில் 78% முதல் 90% வரை அமெரிக்காவிலிருந்து வருபவை என தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments