அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து ஆராய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கூடியது.
அனுராதபுரம் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அண்மையில் (05) கூடியது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்கு அமைய செயற்படுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது. அத்துடன், இவ்வழக்கிற்கான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய வைத்திய அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட சிறுமி தொடர்பில் தற்பொழுது அனுராதபுரத்திற்கு மேலதிகமாக அத்தனகல்ல மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதால், வழக்கு விசாரணைகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது. அத்துடன், இந்த வழக்கு மூன்று நீதிமன்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சிறுமி மேலும் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், நீதிமன்ற மற்றும் சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், அரச நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையிலும் அனுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கப்பாட்டை வெளியிட்டது.
சம்பந்தப்பட்ட சிறுமியின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் மேலும் கவனம் செலுத்துமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒன்றியம் பரிந்துரைத்தது.
அதேநேரம், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வதில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், இது விடயத்தில் எதிர்கால நடவடிக்கைகளில் உரிய தலையீடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளை அறிக்கையிடும்போது சிறுவர்களின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் அவர்களின் கௌரவம் என்பவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் ஊடக மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து வழிகாட்டல்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்ட உபகுழு தலையீடு செய்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் ஏற்படுகின்ற சட்ட மற்றும் நடைமுறை ரீதியான தடைகளை தாண்டுவதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உபகுழு செயற்படும்.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களான குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், பிரதியமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன ஆகியோர் நிகழ்நிலை (சூம்) தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டனர்.


