மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை (Vehicle Revenue Licence) விநியோகிக்கும் சேவைகள் நாளை நவம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மின்னணு வருமான அனுமதிப்பத்திர சேவையான eRL 01 கட்டமைப்பை, தற்போதுள்ள ‘Lanka Government Cloud 2’ கட்டமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட ‘Lanka Government Cloud 2+’ கட்டமைப்புக்கு மாற்றும் தொழில்நுட்பப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
‘GovTech Sri Lanka’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளைக் கருத்திற்கொண்டு, நாளை நவம்பர் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன.
இதனால், குறித்த காலப்பகுதியில் வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், எவ்வித தண்டப்பணமும் இன்றி நவம்பர் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் இணையவழிச் சேவையும் நவம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை இரவு முதல் நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை இரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக மேல் மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக இடைநிறுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு திணைக்களம் தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.


