தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.
இந்தத் திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாத்திரமே பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து கிரீஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதேபோன்று, நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்குப் பயணமாகியுள்ளார்.
இந்நிலையில், விமான நிலையத்தில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் அனிருத், லதா ரஜினிகாந்தின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், எதிர்வரும் 21ஆம் திகதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


