உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, பரவலான பணவீக்கம் மீண்டும் தலைதூக்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கனடா மத்திய வங்கி (Bank of Canada) தனது கொள்கை வட்டி வீதத்தை (policy interest rate) 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதன்படி, நாட்டின் வட்டி வீதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, அதாவது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித மாற்றமும் இன்றி 2.25 சதவீதமாக நீடித்து வந்த வட்டி வீதத்தை மத்திய வங்கி உயர்த்தியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
மத்திய கிழக்கில் அமெரிக்கத் தலைமையில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
இது, உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளை உயர்த்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள கனடா வங்கி, வர்த்தக நிறுவனங்கள் இதுவரை இச்சிரமங்களைத் தாங்கிக் கொண்ட போதிலும், வரும் ஆண்டில் இந்த கூடுதல் செலவுகள் நுகர்வோர் மீது சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
கனடாவின் பணவீக்கம் இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 3.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2027ஆம் ஆண்டில் சராசரியாக 3 சதவீதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நாட்டின் பணவீக்கம் மீண்டும் வங்கியின் இலக்கான 2 சதவீத நிலையை அடைவதற்கு 2028ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை செல்லக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


