Thursday, November 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வங்காள விரிகுடாவில் ‘அக்வான்’ புயல் தீவிரமடைகிறது

வங்காள விரிகுடாவில் ‘அக்வான்’ புயல் தீவிரமடைகிறது

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அக்வான்’ (Akvan) புயல் மேலும் தீவிரமடைந்து வருவதால், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதுடன் அதற்கு ‘அக்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நேற்று 16ஆம் திகதி மாலை 5.30 மணியளவில், குறித்த புயல் 12.2 பாகை வடக்கு அட்சரேகை மற்றும் 85.7 பாகை கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டிருந்ததாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் வடக்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று 17ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நவம்பர் 19ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், நவம்பர் 20ஆம் திகதி காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரையில் நெல்லூர் – தூணி பகுதிகளுக்கு இடையில் கரையைக் கடக்கக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 05 முதல் 17 பாகை வடக்கு அட்சரேகைக்கும், 80 முதல் 90 பாகை கிழக்கு தீர்க்கரேகைக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 11 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என அறிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments