Tuesday, July 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யானைத் தந்தம், மான் கொம்புகளுடன் ஒருவர் கைது

யானைத் தந்தம், மான் கொம்புகளுடன் ஒருவர் கைது

கம்பஹா – கலகெடிஹேன பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அரிய வகை கடல் நத்தையோடுகளுடன் 45 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்னெடுத்த கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள, பழங்காலப் பொருள்கள் சேகரித்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வளாகம் ஒன்றிலேயே இந்த முற்றுகை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்து வனவிலங்குச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பல விலங்குப் பாகங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, 5 மரை மான்களின் கொம்புகள், 8 புள்ளி மான்களின் கொம்புகள் மற்றும் தனியான 2 மான்கொம்புகள், பாதுகாக்கப்பட்ட இலங்கை இராட்சத நில நத்தைகளின் 5 ஓடுகள், 2 சிலந்திச் சங்குகள், அடையாளம் காணப்படாத மேலும் 23 அரிய வகைச் சங்குகள் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹொரகொல்ல வனவிலங்கு அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தனிநபர் பிணையில் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான வனவிலங்குப் பாகங்கள் அனைத்தும் எதிர்வரும் 10ஆம் திகதி கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments