Tuesday, July 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முக்கிய சில விடயங்களில் இணங்கி செயற்படும் 6 தமிழ் - முஸ்லிம் கட்சிகள்

முக்கிய சில விடயங்களில் இணங்கி செயற்படும் 6 தமிழ் – முஸ்லிம் கட்சிகள்

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இன்று மதியம் கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தினர்.

இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர் சுரேந்திரன் குருசாமி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து ‘தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம்’ என்ற தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

“இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு, சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர்.

இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

புதிய அரசமைப்பு

அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதாக வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசிடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தல்கள்

மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் நடத்தப்படும் என அரசு தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.

மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அனைத்து சமூகங்களையும்
பாதிக்கும் காணிப் பிரச்சினைகள்

நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகப்  பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்தமையுடன், இந்த விடயங்களில் பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.” – என்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments