இந்தியாவின் தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, கணவரை பொலிஸார் விடுவிக்கக் கோரி பொலிஸ் நிலையத்தில் தீக்குளித்த 28 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒறையூர் பகுதியைச் சேர்ந்த கண்மணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஒறையூர் ஊராட்சியில், வி.பி.ஜி. ராம் ஜி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த 125 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், வேலை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்மணிக்கும் ஊராட்சி செயலாளர் அருள் என்பவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இரு தரப்பினரும் புதுப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, கடந்த 13ஆம் திகதி கண்மணியின் கணவர் லட்சாதிபதி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த கண்மணி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, தனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அவரை விடுவிக்குமாறும் கோரியுள்ளார்.
இதன்போது, ஏற்கனவே தன்னுடன் கொண்டு வந்திருந்த பெற்றோலை உடலில் ஊற்றி தீக்குளித்த அவர், தீப்பற்றிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு பண்ருட்டி அரச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஊராட்சி செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்மணியின் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில், இரு தரப்பினரும் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஊராட்சி செயலாளர் அருள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுப்பேட்டை பொலிஸ் நிலையம் மற்றும் ஒறையூர் கிராமத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


