நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பித்துள்ளது.
இன்று (26) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் நாளை (27) காலை 9 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, புலத்சிங்கள- கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, கலிகமுவ; நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ கோரளை, நோர்வூட்; இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல, எலபாத்த, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கு இரண்டhம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தில் தவலம, கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல, களுத்துறை மாவட்டத்தில் மதுராவல, பேருவளை, மில்லனிய மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகள் எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், கண்டி மாவட்டத்தில் உடதும்பர, பஸ்பாகே கோரளை, உடபலாத்த மற்றும் உடுநுவர; கேகாலை மாவட்டத்தில் கேகாலை, மாவனல்லை- தெரணியகலை- வரகாபொலை- அரநாயக்க, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை தொடர்கின்றது.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல மற்றும் குருநாகல், இரத்தினபுரி மாவட்டத்தில் கிரியெல்ல மற்றும் ஓபநாயக்க ஆகிய பகுதிகளும் இதில் உள்ளடங்குகின்றன.
எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


