இந்தியாவின் தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தில் வீட்டின் மாடி அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி கீழத்தெருவில் நேற்று (04) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யோகேஷ் (20) மற்றும் அவரது நண்பர் மனோஜ் (21) ஆகியோர் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான பட்டாசுகளை வாங்கி வீட்டின் மாடியிலுள்ள தனி அறையில் வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் வீட்டின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
இதன்போது யோகேஷ், அவரது தாயார் யோகவாணி (45) மற்றும் நண்பர் மனோஜ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார், காயமடைந்த மூவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த மனோஜ் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஏனைய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பட்டாசுகள் வெடித்ததற்கான காரணம் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கொட்டாம்பட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


