இந்தியாவின் கொல்கத்தா விமான நிலையத்தில் ஓடுபாதைக்குள் நரி ஒன்று நுழைந்ததால், தரையிறங்குவதற்குத் தயாராக இருந்த இண்டிகோ விமானம் ஒன்று திசைதிருப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து கொல்கத்தா நோக்கிப் பயணித்த குறித்த விமானம், தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் விமானி ஓடுபாதையில் நரி ஒன்றைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, அவர் உடனடியாக வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு (ATC) தகவல் வழங்கியுள்ளார்.
இதன்போது, விமானத்தைத் தரையிறக்காமல் மீண்டும் மேலே செலுத்துமாறு கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, குறித்த விமானம் மேற்கு வங்கத்தின் துர்காபூரில் அமைந்துள்ள ஆண்டாள் விமான நிலையத்திற்குத் திசைதிருப்பப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் விமானக் கடத்தல் மிரட்டல்!
இதேவேளை, கொல்கத்தா விமான நிலையத்தில் மும்பை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றுக்கு விமானக் கடத்தல் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தின் கழிவறைகளில் ஒன்றிலுள்ள கண்ணாடியில் விமானக் கடத்தல் தொடர்பான மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்டறிந்த விமானப் பணியாளர்கள் உடனடியாக வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தீவிர பாதுகாப்புச் சோதனை!
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) மற்றும் விசேட பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து விமானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரிவான சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, பயணிகளின் பொதிகள் மற்றும் விமானத்தில் சாமான்கள் வைக்கப்படும் பகுதிகளும் தீவிரமாகச் சோதனையிடப்பட்டுள்ளன.
பின்னர், குறித்த விமானத்திற்குக் கிடைத்த கடத்தல் மிரட்டல் போலியானது எனத் தெரியவந்துள்ளது.
அதேவேளை, மிரட்டல் செய்தியை எழுதியவர் யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலில் காலை 10.30 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த விமானம், பாதுகாப்புச் சோதனைகள் காரணமாக மாலை 5 மணிக்குப் புறப்படுமாறு மாற்றியமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா விமான நிலையத்தில் சில மணி நேர இடைவெளியில் இடம்பெற்ற இந்த இரு சம்பவங்களும் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


