Sunday, November 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் மௌனம் காக்காமல் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளமை இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் செயற்பட்டு வரும் நிலையில், தமிழக விவசாயிகளின் நலனைக் காப்பதற்காக தமிழகக் கட்சிகளும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தை நடுவர் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சட்டமன்றத்திலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை தி.மு.க. வலியுறுத்தியதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகப் பிரதமரிடம் கையளிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக முதல்வர் மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பில் மீண்டும் தீவிரமாகப் பேசி வரும் நிலையில், தமிழக அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள ஸ்டாலின், கர்நாடக முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments