தடகள வீரர்களுக்கு போதிய ஆதரவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நிராகரித்துள்ளார்.
தேசிய அணியில் இடம்பெற்றுள்ள குறித்த வீரருக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதனைத் தாம் நேரில் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஆதரவு பெறும் வீரர்கள் சமூக ஊடகங்களில் காலணிகள் உள்ளிட்ட அடிப்படை உபகரணங்களுக்காக நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மிஷன் ஒலிம்பிக் 2028” திட்டத்தின் கீழ் தேசிய மட்ட வீரர்களுக்கு மாதாந்த உதவித்தொகைகள் மற்றும் ஊட்டச்சத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுமார் 370 வீரர்களுக்கு தலா 60,000 ரூபாய் ஊட்டச்சத்து உதவித்தொகையும், சுமார் 1,500 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


