அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் எந்தவொரு சமாதான உடன்பாடும் எட்டப்படாவிட்டால், புத்தாண்டில் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்கத் தயங்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபொக்ஸ் நியூஸ் (Fox News) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானுடன் மறைமுக இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாதிருப்பது குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் காலத்தை இழுத்தடிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை ஈரான் மீறுவதற்கு முயற்சித்தால், அவ்வாறு செயற்படும் ஈரானியக் கப்பல்கள் தாக்கி மூழ்கடிக்கப்படும் என்றும் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் கடந்த பெப்ரவரி மாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணுவாயுதத் திட்டங்களை முடக்குவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது.
இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடிப்படை இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு, ஈரானின் அணுசக்தித் திட்டம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவுகின்றன.
குறிப்பாக, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றம் சர்வதேச எரிசக்திச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் புத்தாண்டில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, மத்திய கிழக்கில் போர் மீண்டும் தீவிரமடையக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், ஈரான் மீதான அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்றும் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


