Sunday, November 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஜனநாயக கட்சியின் வெற்றியால் AI நிறுவனங்களின் பங்குகள் பாரிய வீழ்ச்சி

ஜனநாயக கட்சியின் வெற்றியால் AI நிறுவனங்களின் பங்குகள் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றிகள், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியில் மந்தநிலை ஏற்படுமோ என்ற கவலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பங்குச் சந்தை சரிவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பில்லியன் கணக்கான டொலர் சந்தை மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவின் வேகத்தைக் குறைப்பதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றதால், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

டவ் ஜோன்ஸ் (Dow Jones) தரவுகளின்படி, தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் (Nasdaq) கூட்டுப் பங்குச் சந்தைக் குறியீடு 5.5% க்கும் மேல் வீழ்ச்சியில் நிறைவடைந்துள்ளது.

அதன் சந்தை மூலதனத்தில் சுமார் 2.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், 2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு சந்தித்த மிக மோசமான வீழ்ச்சியாக இது பதிவாகியுள்ளதுடன், ஏனைய முக்கிய அமெரிக்கப் பங்குச் சந்தைக் குறியீடுகளும் பெரும் சரிவைக் கண்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவிற்காகச் செலவழிக்கப்படும் பெரும் தொகையானது எதிர்பார்த்த பலனைத் தருமா என்பது குறித்த பரவலான கவலைகளுக்கு மத்தியிலேயே இந்தப் பங்கு விற்பனைச் சரிவு நடந்துள்ளது.

அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல தொகுதிகளில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியினர், தரவு மையங்கள் மற்றும் AI ஆகியவற்றின் அதிவேகப் பரவலைக் குறைப்பதற்காகப் பிரச்சாரம் செய்தனர்.

மேலும், இத்தொழில்நுட்பத்தை இயக்குவதற்கு இன்றியமையாத தரவு மையங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதிலும் உள்ள வாக்களிப்புப் பட்டியல்களில் பல நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் கைப்பற்றியுள்ள ஜனநாயக் கட்சி, டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments