சர்வதேச திரையுலகில் இந்தியக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மற்றுமொரு மைல்கல்லை எட்டவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள 54ஆவது சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில், விருது வழங்குபவர்களில் ஒருவராக விஜய் சேதுபதி பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்தியக் கலைஞர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப்படத் துறையில் ஒஸ்கார் விருதுகள் எவ்வாறு உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகின்றனவோ, அதேபோன்று தொலைக்காட்சித் துறையில் எம்மி விருதுகள் சர்வதேச அளவில் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
இதற்கு முன்னதாக, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச எம்மி விருது விழாவை நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான வீர்தாஸ் தொகுத்து வழங்கியிருந்தார். இதன்மூலம், அந்த விழாவைத் தொகுத்து வழங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.
இந்தி இணையத் தொடரான ‘ஃபார்ஸி’ மற்றும் ‘ஜவான்’ திரைப்படம் ஆகியவற்றின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற விஜய் சேதுபதி, தற்போது சர்வதேச எம்மி விருது விழாவில் பங்கேற்கவுள்ளமை அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


