களுத்துறை சிறைச்சாலையினுள் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற கைதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மொனராகலை வெலியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் குறித்த கைதிக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த அக்டோபர் 31ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் களுத்துறை சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணமான கைதி சிறைச்சாலையின் கழிவறையினுள் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற போது ஏனைய கைதிகள் சிலர் அதனைக் கண்டு அவரைக் காப்பாற்றியுள்ளனர். அதன்பின்னர் குறித்த கைதி சிறை அதிகாரிகளால் நாகொட களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


