Sunday, November 22, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் இனவெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் கைது!

கனடாவில் இனவெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் கைது!

கனடாவின் டொரொன்டோ நகருக்குச் சென்று, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் மீது வாகனத்தை ஏற்றிப் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தனது சமூகப் பணியாளரிடம் தெரிவித்த நபர் ஒருவர் ஹாமில்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி பிற்பகல் 1:50 மணியளவில் இது தொடர்பான தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கும் டொரொன்டோ பொலிஸ் சேவைக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சந்தேகநபரின் வாகனம் குறித்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், அன்றைய தினம் மாலை 4:30 மணியளவில் ஸ்கைவே பாலத்திற்கு கீழே உள்ள ஈஸ்ட்போர்ட் டிரைவ் பகுதியில் வைத்து சந்தேகநபரின் வாகனத்தை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

இதனையடுத்து, வெறுப்புணர்வால் தூண்டப்பட்டு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் 55 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெயர் விபரங்கள் வெளியிடப்படாத அவர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறுப்புணர்வால் தூண்டப்படும் சம்பவங்களை நாம் மிகவும் பாரதூரமானதாகக் கருதுகிறோம். பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நகரத்தை உருவாக்கச் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதில் நாம் உறுதியாக உள்ளோம்” என ஹாமில்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெறுப்புணர்வால் தூண்டப்படும் குற்றங்கள் அல்லது சம்பவங்களை எதிர்கொள்ளும் அல்லது நேரில் காணும் எவரும்—அது குற்றவியல் வரம்பிற்குள் வராவிட்டாலும் கூட—உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் எந்த இனக்குழுவை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தார் என்ற விபரத்தை பொலிஸார் வெளியிடவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments