கண்டி, குண்டசாலை – வராப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் 23 வயதுடைய திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணவருக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பாதிக்கப்பட்ட பெண்ணைக் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திட்டமிட்டுத் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள பெண்ணின் கணவர், தான் சனிக்கிழமை இரவு இசைக் கச்சேரி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார் எனவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்த போதே மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டார் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையான கணவர், அவளுக்குத் தொடர்ச்சியாகப் பாரிய உடல், மன சித்திரவதைகளை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துப் பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் பலமுறை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கணவரின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அண்மைய நாள்களாகப் பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். அத்துடன், கணவரிடமிருந்து சட்டபூர்வமாக விவாகரத்துப் பெற்றுக்கொள்வதற்கும் அவர் தயாராகி வந்த நிலையிலேயே, இந்த மர்ம மரணம் சம்பவித்துள்ளது என்று உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்ணின் மரணம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்பதைக் கண்டறியும் நோக்கில், சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


