Tuesday, October 6, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கஞ்சா கடத்திய கனடியருக்கு சிறைத்தண்டனை

கஞ்சா கடத்திய கனடியருக்கு சிறைத்தண்டனை

கனடாவின் வான்கூவர் நகரிலிருந்து லண்டனுக்குப் பயணப் பையில் வைத்து 31 கிலோகிராம் கஞ்சாவைக் கடத்த முயன்ற கனடாப் பிரஜை ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கட்கிழமை அறிவித்துள்ளனர்.

2024 அக்டோபர் 28 ஆம் திகதி வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் கனடா எல்லை சேவைகள் முகவரகத்தால் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லவிருந்த ஒரு பயணப் பை சோதனையிடப்பட்டது.

அதில் 31 கிலோகிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பாக ஒன்டாரியோவின் வின்ட்சர் பகுதியைச் சேர்ந்த 56 வயதான அலாவுதீன் கோக் என்பவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மீது கஞ்சா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

விசாரணைகளின் போது அலாவுதீன் கோக் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், அவரைக் கைது செய்ய கனடா முழுவதுக்குமான பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவர் ஒன்டாரியோவில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

ஏற்றுமதி செய்யும் நோக்கில் கஞ்சாவைக் கையில் வைத்திருந்ததாகக் கடந்த ஜூலை மாதம் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஆயுட்கால துப்பாக்கிப் பயன்பாட்டுத் தடையும் விதிக்கப்பட்டது.

கனடாவில் கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்ட போதிலும், நாட்டின் உள்ளே இன்னமும் “சட்டவிரோத கஞ்சா சந்தை” தீவிரமாக இயங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments