இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பதிவிடப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வட்ஸ் அப்பில் எளிதாக பகிரும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராமில் இருந்து வட்ஸ் அப்பிற்கு ரீல்ஸ்களை பகிர்வதற்கு அவற்றை தனியாக சேமிப்பது அல்லது அதன் இணைப்பை பகிர்வது போன்ற நடைமுறைகள் உள்ளன.
இந்நிலையில், இந்த நடைமுறையை மேலும் எளிதாக்கும் வகையில், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளை வட்ஸ் அப்புடன் ‘Accounts Center’ மூலம் இணைக்கும் வசதி சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், வட்ஸ் அப்பில் புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்வு செய்யும் பகுதியிலேயே, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை பார்க்க முடியும்.
அவற்றில் தேவையானவற்றைத் தேர்வு செய்து நேரடியாக வட்ஸ் அப் உரையாடல்களுக்கு அனுப்புவதுடன், ஸ்டேட்டஸாகவும் பதிவிட முடியும். இதனால் ஒரே உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்கம் செய்து வட்ஸ் அப்பில் பதிவேற்ற வேண்டிய அவசியம் குறையும்.
தற்போது குறிப்பிட்ட பீட்டா பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த வசதி, படிப்படியாக மேலும் பல பயனர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


