Sunday, November 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம்

இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம்

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், கட்டிட வரைபடத்திற்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் TIN இலக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல், வணிகத்தைப் பதிவுசெய்தல், இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டையைப் (Credit Card) பெறுதல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர் TIN இலக்கம் செல்லுபடியானதுதானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.

TIN இலக்கத்தை இதுவரை பெறாத நபர்கள், உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை (e-Services) மூலம் அதற்குப் பதிவுசெய்து கொள்ள முடியும் என்றும் அறியத்தரப்பட்டுள்ளது.

அத்துடன், தன்னிடம் உள்ள TIN இலக்கம் செல்லுபடியானதா என்பதை உள்நாட்டு திறைசேரி திணைக்களத்தின் இ-சேவை வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தல் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் TIN இலக்கம் திரையில் தோன்றும் என்பதுடன், நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள அச்சிடப்பட்ட பிரதியை (Printout), குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு திறைசேரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments