இந்த ஆண்டில் அவதானிக்கக்கூடிய மிக முக்கியமான விண்கல் பொழிவுகளில் ஒன்றான ‘லியோனிட்’ (Leonids) விண்கல் பொழிவு இன்றிரவு வானில் தென்படவுள்ளதாக வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது, உச்சக்கட்ட நேரத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 15 முதல் 20 விண்கற்கள் வரை வானில் எரிந்து விழுவதைக் காணக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்க ராசிக்குரிய (Leo) நட்சத்திரக் கூட்டத்தின் திசையிலிருந்து விண்கற்கள் தோன்றுவது போல் காட்சியளிப்பதால், இந்த விண்கல் பொழிவுக்கு ‘லியோனிட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விண்கல் பொழிவை வானின் கிழக்குத் திசையில் தெளிவாக அவதானிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்றிரவு நள்ளிரவு முதல் இதனைப் பார்க்க முடியும் என்றாலும், சூரிய உதயத்திற்கு சற்று முந்தைய அதிகாலை வேளையே விண்கல் பொழிவைத் தெளிவாகக் காண்பதற்கு மிகவும் உகந்த நேரமாகும்.
மேலும், இந்த விண்கல் பொழிவு நிகழும் அதே வான்பகுதியில் சூரியக் குடும்பத்தின் முக்கிய கோள்களான செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) ஆகியவற்றையும் அவதானிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.


