Monday, July 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அஸ்வெசும திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ள 4 இலட்சம் குடும்பங்கள்!

அஸ்வெசும திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ள 4 இலட்சம் குடும்பங்கள்!

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும் 400,000 குடும்பங்கள் இந்த நலன்புரித் திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தற்போதைய மறு ஆய்வுகளின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘மிகவும் ஏழ்மையான’ பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை என்றும், அதற்குப் பதிலாக 2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பயனாளிகளைக் குறைப்பது பொருத்தமானதா என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்களின் வருமானம் ஸ்தம்பித்திருக்கும் நிலையில், விலையேற்றம் காரணமாக 33% க்கும் அதிகமான மக்கள் இன்னும் வறுமையிலேயே வாடுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதை அவர் நினைவுகூர்ந்தார்.

வெறும் IMF நிபந்தனைகளுக்காக ஏழை மக்கள் நீக்கப்பட்டால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments