Friday, March 20, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்க நிர்மாணத்திற்கான அடிக்கலை ஜனாதிபதி நாட்டிவைத்தார்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்க நிர்மாணத்திற்கான அடிக்கலை ஜனாதிபதி நாட்டிவைத்தார்

இயல்பாகவே திறமைகளைக் கொண்ட அனைத்து கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கும் தேசிய அணியில் பங்கேற்க சமமான வாய்ப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேசிய அபிவிருத்திப் பாதை திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச தரம்வாய்ந்த கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிறைவேற்றுக் குழுவினரின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயின் பங்கேற்புடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கட்கிழமை (01) பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது.

அடிக்கல் நாட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கிற்கான நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை, அதற்கான முழு செலவையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

சர்வதேச தரத்திலான கிரிக்கெட் விளையாட்டரங்கை நிர்மாணிப்பது மாத்திரமன்றி, நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் அதனை உயர்தர நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்துறை நகரமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அது தொடர்பான திட்டமும் அடிக்கல் நாட்டுவிழா வைபவத்தின்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்தவினால் அறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், மண்டைதீவிலுள்ள 138 ஏக்கர் பரப்பு நிலப்பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விளையாட்டுத்துறை நகரில் நீச்சல் தடாகம், பல்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கிய பூரணமான உள்ளக விளையாட்டரங்கு, நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், சொகுசு தொடர் மாடி வீடுகள், வர்த்தக வளாகங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியனவும் நிர்மாணிக்கப்படும்.

மண்டைதீவில் 48 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கின் மையப்பகுதி 10 ஆடுகளங்களைக் கொண்டிருக்கும்

இந்த விளையாட்டரங்கின் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஆடுகளத்திலிருந்து எல்லைக்கோடுவரையான தூரம் 80 மீற்றரைக் கொண்டிருப்பதாகும். இது சர்வதேச அரங்குகள் கொண்டிருக்கும் வழமையான 75 மீற்றரைவிட 5 மீற்றர் அதிகமாகும்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும். முதற்கட்டமாக, போட்டிகளை நடத்தக்கூடிய தரத்திற்கு விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டு பார்வையாளர் இருக்கைகள் பொருத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் பிரதான பார்வையாளர்கூடமும் ஊடகவியலாளர்கள் மண்டபமும் அமைக்கப்படும். மூன்றாம் கட்டமாக கேட்போர்கூடம் அமைக்கப்படுவதுடன் பேரொளி மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் நான்காவதான கடைசிக் கட்டத்தில் இடம்பெறும்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேச சபையால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கத்தில், சுமார் 40,000 இரசிகர்கள் நேரடியாக போட்டிகளை கண்டுகளிக்கக்கூடிய வகையில் பார்வையாளர் கூடங்கள் அமைக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கமானது, சர்வதேச பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வசதிகளுடன் இலங்கையில் அமைக்கப்படும் 5ஆவது விளையாட்டரங்கமாக அமையும். மேலும் இந்த மைதானமானது சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய 7ஆவது மைதானமாக இலங்கை கிரிக்கட் வரலாற்றில் பதிவாகும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியானது, வட மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியமான அம்சமாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை மூலம் இனங்களுக்கு இடையில் சகவாழ்வை கட்டிஎழுப்பும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முயற்சியை இது உறுதிசெய்கிறது. – (என்.வீ.ஏ.)

இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சியானது, வட மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியமான அம்சமாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை மூலம் இனங்களுக்கு இடையில் சகவாழ்வை கட்டிஎழுப்பும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முயற்சியை இது உறுதிசெய்கிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments