மனிதர்களைப் போல் டிஜிட்டல் பணிகளை மேற்கொள்ளும் மெட்டாவின் புதிய AI ஏஜென்ட்
பயனர்களின் அன்றாட டிஜிட்டல் பணிகளை மனிதர்களைப் போல தானாகவே மேற்கொள்ளும் ‘மியூஸ்’ (Muse) எனப்படும் புதிய தனிநபர் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்டை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
‘மியூஸ் ஸ்பார்க்’ (Muse Spark) எனப்படும் அதிநவீன மொழி மாதிரியின் மூலம் இயங்கும் இந்த AI சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல், காலண்டர், இணையவழி பணப்பரிவர்த்தனை, உடற்பயிற்சி, ஸ்மார்ட் ஹோம் மற்றும் இணையவழி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு செயலிகளுடன் மியூஸ் இணைந்து செயற்படக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் அனுமதியுடன் மின்னஞ்சல்களை அனுப்புதல், பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்தல், இணையப் படிவங்களை நிரப்புதல், சமையல் குறிப்புகளை மளிகைப் பொருட்கள் பட்டியலாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த AI ஏஜென்ட் தானாகவே மேற்கொள்ளும்.
அத்துடன், இணையவழி கொள்வனவுகளின்போது செக்அவுட் மற்றும் கட்டணச் செலுத்துதல் போன்ற பணிகளையும் பயனர்களின் அனுமதியுடன் மியூஸ் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயனர்கள் தங்களுக்குத் தேவையான செயலிகளை மட்டும் மியூஸுடன் இணைத்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை, AI ஏஜென்ட்டிற்கு விருப்பமான பெயர் மற்றும் அவதாரத்தை அமைத்துக்கொள்ளும் வசதியும் இதில் காணப்படுகிறது.


