முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக முன்னிலையான ஆதரவாளர்கள், ஏனைய கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஏனைய கட்சிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 500க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர். பெருந்திரளான மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவை அனைத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நீதித்துறையின் சுயாதீனத்தை நாம் எதிர்பார்த்தோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்காக நாம் முன்னின்றோம்.
எனினும் அதற்கு அப்பால் ஊழல், மோசடிக்கு ஆதரவாக போராடுபவர்கள் அல்ல. இவ்றை ஒழிப்பதற்காக நாம் தொடர்ந்தும் முன்னிற்போம். அதற்கான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார்.


