தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற முதலாவது ‘யூரோவிஷன் ஆசியா’ பாடல் போட்டியில் பிலிப்பைன்ஸ் முதலிடத்தைப் பெற்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
11 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 19 வயதான பாடகி கார்மெல், ‘சோப்ரா-சோப்ரா’ (Chopra-Chopra) என்ற பாடலைப் பாடி மொத்தம் 211 புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டினார்.
தாய்லாந்து 170 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், வியட்நாம் 164 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
மேலும், மலேசியா 152 புள்ளிகளுடன் நான்காம் இடத்தையும், லாவோஸ் 139 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தையும் பிடித்தன.
ஐரோப்பிய யூரோவிஷன் போட்டியின் வாக்களிப்பு முறையைப் பின்பற்றி, நடுவர் குழுவின் மதிப்பீடுகள் மற்றும் பொதுமக்களின் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆசிய யூரோவிஷன் போட்டி தற்போது முதன்முறையாக நடைபெற்றுள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


