2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான இன்று (28), பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் செலவினத் தலைப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சுக்குரிய செலவினத் தலைப்புகள் (103, 222 முதல் 224, 304, 325) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.
குழுநிலை விவாதத்தின் நிறைவில், இன்று மாலை 6.20 அளவில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதுகாப்பு அமைச்சின் 103ஆம் இலக்கச் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பொன்றைக் கோரினார்.
இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், குறித்த செலவினத் தலைப்புக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய, 81 மேலதிக வாக்குகளால் 103ஆம் இலக்கச் செலவினத் தலைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 225ஆம் இலக்கச் செலவினத் தலைப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதுடன், அவ் அமைச்சுக்குரிய ஏனைய செலவினத் தலைப்புகள் எவ்வித வாக்கெடுப்புமின்றி சபையில் அங்கீகரிக்கப்பட்டன.


