இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 21 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் காலை திருக்கோவில் – பொத்துவில் வீதியின் விநயாகபுரம் 01 பகுதியில், பொத்துவில் நோக்கிச் சென்ற ஓட்டோ சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த ஓட்டோச் சாரதி, பின் இருக்கையில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.
ஏனைய பெண்ணும் இரு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் காலை புறக்கோட்டை – கொதட்டுவ வீதியில் கொதட்டுவ நகருக்கு அருகில் புறக்கோட்டை நோக்கிச் சென்ற பஸ்ஸுடன் எதிர்த்திசையில் வந்த ஓட்டோ மோதியதில் 37 வயதுடைய ஓட்டோச் சாரதி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த ஓட்டோச் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
நேற்றுமுன்தினம் அதிகாலை குருணாகல் – புத்தளம் வீதியின் வேரப்பொல பகுதியில் புத்தளம் நோக்கிச் சென்ற கார் ஒன்று பிறிதொரு வாகனத்தை முந்த முற்பட்ட போது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த 67 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்தார்.
காரின் சாரதியும் திடீர் நோய் நிலை காரணமாக வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கள் அதிகாலை அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக வீதியின் 06 ஆம் கிலோமீற்றர் தூணுக்கு அருகில், கெரவலப்பிட்டியவிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற லொறி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த லொறி சாரதி மற்றும் இடதுபுற இருக்கையில் பயணித்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, இடதுபுற இருக்கையில் பயணித்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், திங்கள் இரவு திஸ்ஸமஹாராம குளக்கட்டு வீதியின் 06 ஆம் கிலோமீற்றர் தூணுக்கு அருகில் தெபரவெவயிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த 38 வயதுடைய பாதசாரி தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, திங்கள் இரவு சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய – பள்ளம வீதியின் 05 ஆம் கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பல்லம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகாணில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த 24 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


