நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 11 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 275 பேர் இந்தியர்களாவார்.
நேபாள இராணுவத்தினர் உள்ளிட்ட 20,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சேதமடைந்த நீர்மின் நிலையங்களின் சுரங்கப் பாதைகளிலும் இந்திய நிபுணர்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மீட்கப்பட்ட உடல்களில் 500-க்கும் மேற்பட்டவை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், அவற்றை அடையாளம் காண்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளை நேபாள பொலிஸ் சேகரித்து வருகிறது.
இதனிடையே, பெருவெள்ளத்தால் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரண முகாம்களில் போதிய வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், திபெத் பகுதியில் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் நம்ரங் கோலா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 4 வீடுகளும் ஒரு தொங்கு பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு சிறிய நீர்மின் நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


