நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் பல புதிய நடைமுறைகளை அமுல்படுத்துவது குறித்து, அமைச்சர் கே. டி. லால் காந்த தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் கூடிய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஆராயப்பட்டது.
அரசாங்கம் நிர்ணயித்துள்ள உத்தரவாத விலைக்கு அமைவாக நெல் கொள்வனவை திறம்பட மேற்கொள்வது, மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது, விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வது ஆகியவற்றிற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
வியாபாரிகள் விவசாயிகள் போன்று காண்பித்து அரசாங்கத்துக்கு நெல் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் கமநல சேவைகள் திணைக்களத்தின் உர மானியப் பயனாளி விவசாயிகளின் பெயர்ப் பட்டியலை நெல் கொள்வனவு நிலையங்களுக்கு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், விவசாயி பயிரிட்டுள்ள ஏக்கர் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அவர் விற்பனை செய்யக்கூடிய நெல் அளவை உறுதிப்படுத்துவதன் மூலம், மோசடியான முறையில் அதிகளவு நெல்லை விற்பனை செய்வதைத் தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.


