Monday, June 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குறித்து ஆராய்வு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை குறித்து ஆராய்வு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது தற்போது வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்துதல், நிர்வாக மற்றும் வள ஒதுக்கீட்டு வசதிகளை மேம்படுத்துதல், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தேவைகள், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நேரடியாக கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் மற்றும் சேவை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, வைத்தியசாலையின் பல்வேறு வார்டுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன், மருத்துவ சேவை வழங்கப்படும் நடைமுறைகளையும் பார்வையிட்டனர்.

இதன்போது உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிக் கட்டிடத்தின் பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றோம். இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எமக்கு கிடைத்துள்ளன. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடர்பாக பல்வேறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிர்வாக கட்டமைப்பை உடனடியாக மாற்றாமல் தொடர்வதே எமது நிலைப்பாடாகும். அதேவேளை, நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அமைவாக, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை விசேட பிரிவாக மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது குறித்தும், எதிர்காலத்தில் முழு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படுகின்றன.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதற்காக அமைச்சின் ஊடாக விசேட குழுவொன்றை நியமித்துஇ தேவையான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments