Wednesday, March 18, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்தம்: "சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" - டிரம்ப்

தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்தம்: “சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” – டிரம்ப்

தாய்லாந்து-கம்போடியா இடையே நிலவும் நீண்ட கால எல்லை பிரச்சினை தற்போது மோதலாக வெடித்தது. இதனால் இரு நாடுகளின் வீரர்களும் எல்லையில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இதுவரை இரு தரப்பிலும் 33 பேர் பலியாகி உள்ளனர். எனவே எல்லை மாகாணங்களான தாய்லாந்தின் சுரின் மற்றும் கம்போடியாவின் ஒடன் மின்ச்சியில் இருந்து சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அதன்பிறகு இரு நாடுகளின் தலைவர்களிடமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோதலை தொடர்ந்தால் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் பாதிக்கப்படும் என அவர்களிடம் டிரம்ப் கூறினார். இதனால் அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து மலேசியாவின் புட்ரஜயா நகரில் பிரதமர் அன்வர் இப்ராகிம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கம்போடிய பிரதமர் ஹன் மானெட்டும், தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாவும் கலந்து கொண்டு பேசினர். இதன் முடிவில் எவ்வித நிபந்தனையுமின்றி மோதலை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் ஒப்புக்கொண்டதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கம்போடியா-தாய்லாந்து போர் நிறுத்தத்திற்கான தனது ஈடுபாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ள அவர், “தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் மற்றும் கம்போடியாவின் பிரதமரிடம் இப்போதுதான் பேசினேன். ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஈடுபாட்டிற்குப் பிறகு, இரு நாடுகளும் ஒரு போர் நிறுத்தம் மற்றும் அமைதியை எட்டியுள்ளன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

இந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளோம். வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு எனது வர்த்தகக் குழுவிற்கு நான் அறிவுறுத்தி உள்ளேன். இப்போது ஆறு மாதங்களில் பல போர்களை முடித்துவிட்டேன் – அமைதியின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று அதில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தன்னுடைய மனைவி விக்டோரியாவுடன் சென்று சந்தித்தார்.அப்போது, இஸ்ரேல் தாக்குதல் நீடித்து வருவதால், காசாவில் நிலவும் உணவு தட்டுப்பாட்டை போக்க அமெரிக்கா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டார். இருவரும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 6 பெரிய போர்களை, தான் நிறுத்தி இருப்பதாக டிரம்ப் கூறினார். தான் தலையிடாவிட்டால், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்டு கொண்டுதான் இருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments