Tuesday, March 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தமிழர்கள் மீதான இன அழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நீட்சி பெற்றுள்ளது - ரவிகரன்

தமிழர்கள் மீதான இன அழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நீட்சி பெற்றுள்ளது – ரவிகரன்

தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நேற்று (14) நடைபெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறோம்.

குறிப்பாக, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் கண்ணீர் சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி, கொடூர செஞ்சோலைப் படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம்.

ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம்.

உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமும் ஒன்றாகும்.

வெள்ளைச் சீருடையோடு கல்வி கற்கச் சென்ற எமது பிள்ளைகளின் மீது விமானம் குண்டுமழை பொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்த கோலம், உடல்கள் சிதறிக் கிடந்த நிலைமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது.

இந்தக் கொடூரம் இடம்பெற்றும் 19 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது என்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்கமுடியாத ஆறாத வலியாகும்.

இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப் படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளும் ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறு இடங்களிலுமிருந்தும் வெளிப்பட்டுவருகின்றன.

எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த் தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலக நாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும்.

தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில் செய்ய முடியாத நிலை, வயலில் தொழில் செய்யமுடியாத நிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர்.

எமது தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை.

குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 432486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் 2,22006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கிறது.

இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப் பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாயகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலைமைகளும் ஏற்படுகின்றன.

அந்த வகையில் கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழின அழிப்புக்கள் நடத்தப்பட்டன. தற்போது தாயகப் பரப்பிலுள்ள எமது தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்புக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும் எனக் கூறுகிறார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை.

அந்த வகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றோம்.

குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கிறோம்.

எனவே, தமிழ்த் தேசிய இனத்தின் மீது இன அழிப்பு நடத்திய, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடத்தியவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வு கிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம்.

படுகொலைகளின்போதும் எமக்கான விடுதலைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம். என்றும் அவர்களை நினைந்திருப்போம் எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments