Saturday, October 24, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டொராண்டோவில் தீபாவளி விழா: போக்குவரத்து தடைகள் அறிவிப்பு

டொராண்டோவில் தீபாவளி விழா: போக்குவரத்து தடைகள் அறிவிப்பு

டொராண்டோ நகரில் நவம்பர் மாதப் பண்டிகைக்கு முன்னதாகவே இந்த வார இறுதியில் இரண்டு முக்கிய இடங்களில் தீபாவளி ஒளித்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கனடாவின் மிகப்பெரிய ஒளித்திருவிழா நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை மதியம் பன்னிரண்டு மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்து மணி வரை நடைபெறுகிறது. இதில் இசை, நடனம் மற்றும் வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மெல் லாஸ்ட்மேன் சதுக்கத்திலும் நாற்பத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் மூன்றாவது ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

அதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் ஹாலோவீன் பண்டிகை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரிவர்சைடு பகுதியில் நாய் அலங்கார அணிவகுப்பு மற்றும் மிட்டாய் வழங்கும் பேரணியுடன் கூடிய ஹாலோவீன் விழா நடைபெறுகிறது. எவர்கிரீன் பிரிக்வொர்க்ஸ் பகுதியில் மறைந்த உறவினர்களை நினைவுகூரும் சிறப்பு நிகழ்வுகளும், பிளாக் கிரீக்கில் விசேஷ சந்தையும், டான்ஃபோர்த் பணிமனையில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நிதி திரட்டும் விழாவும் நடத்தப்படுகின்றன.

கோகோ-கோலா கொலிசியத்தில் வெள்ளிக்கிழமை இரவு இலவச பனிச்சறுக்கு நிகழ்வும் இடம்பெறுகிறது.

இவ்விழாக்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நகரில் கடுமையான போக்குவரத்துத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிடிசி பாதாள தொடருந்து தடம் இரண்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமையன்று கிப்ளிங் மற்றும் ஜேன் நிலையங்களுக்கு இடையிலும், ஞாயிற்றுக்கிழமையன்று கிப்ளிங் மற்றும் கீல் நிலையங்களுக்கு இடையிலும் தொடருந்து சேவை ரத்து செய்யப்பட்டு மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திங்கட்கிழமை காலை ஆறு மணிக்கு வழக்கமான சேவை தொடங்கும். மேலும், லேக்ஷோர் வெஸ்ட் கோ தொடருந்து வழித்தடத்தில் ஆல்டர்ஷாட் மற்றும் யூனியன் நிலையங்களுக்கு இடையே தொடருந்துகள் இயங்காது என்பதால், பயணிகள் மாற்றுப் பேருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கார்டினர் விரைவுச் சாலையிலும் மேற்கு நோக்கிய பாதையில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments