Monday, June 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சொந்தக் காணிகளில் மீள்குடியேற்ற வலியுறுத்தி போராட்டம்

சொந்தக் காணிகளில் மீள்குடியேற்ற வலியுறுத்தி போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும், பலாலி சந்திக்கு அருகிலும் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மக்களின் பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி, தங்களைச் சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியே இவ்விரு இடங்களிலும் ஒரே நேரத்தில் மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.

இன்றைய போராட்டத்தின் போது, தங்களின் பூர்வீகக் காணி விடுவிப்பு மற்றும் உடனடி மீள்குடியேற்றம் தொடர்பான நியாயமான கோரிக்கைகள் அடங்கிய விசேட மகஜர் ஒன்று யாழ். மாவட்ட அரச அதிபரிடம் (மாவட்ட செயலாளர்) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் போராட்டக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்குச் சென்று ஆளுநரிடமும் தங்களின் கோரிக்கை மகஜரை நேரில் கையளித்தனர்.

அத்துடன், இந்தப் பிரச்சினையைத் தேசிய மட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களிடமும் இந்த மகஜரின் பிரதிகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்துறை சார்ந்த அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு மக்களுக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments