யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது.
பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் அறிக்கையை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் வாசித்தார்.
அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு:-
01. சர்வதேச விசாரணை: செம்மணி மனிதப் புதைகுழியில் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி வரையில் சிறுவர்கள் மற்றும் சிசுக்களின் எச்சங்கள் உட்பட 454 மனித என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
02. சர்வதேச தரநிலைகள்: மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், அடையாளம் காணல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை ‘மினசோட்டா நெறிமுறை’ உள்ளிட்ட சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், சுயாதீன டி.என்.ஏ. பரிசோதனை, குடும்பங்களின் பங்கேற்பு மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
03. ஐ.நா. கண்காணிப்பு மற்றும் பிரசன்னம்: செம்மணி அகழ்வுப் பணிகளை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்துச் சான்றுகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், சாட்சியாளர்களின் பாதுகாப்புக்காக யாழ்ப்பாணத்தில் ஐ.நா. மனித உரிமைப் பொறிமுறையின் பிரசன்னம் அவசியமாகும்.
இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், யாழ்ப்பாணம் மாகாண அமல மரித்தியாகிகள் சபையின் முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக், அருட்தந்தையர்கள், துறவிகள் மற்றும் அருட்சகோதரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


