கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் வெறுப்புணர்வு தொடர்பான சம்பவம் குறித்து, லண்டன் பொலிஸ் சேவையின் (LPS) வெறுப்புக் குற்றப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவத்தின் ஒரு பகுதி கைப்பேசியில் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தக் காணொளி CTV News ஊடகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
காணொளியில், காரில் இருந்த ஒருவருக்கும் பெண்கள் குழுவினருக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. சம்பவம் இடம்பெற்றபோது அங்கு சிறுவர்களும் இருந்ததாகக் காணொளியை அனுப்பியவர் தெரிவித்துள்ளார்.
வணிக நிறுவனங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட காரில் இருந்த அந்த நபரை CTV News ஊடகம் அடையாளம் கண்டு தொடர்புகொண்டுள்ளது. அவர் தன்னை ‘டொம்’ (Tom) என மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளார்.
குறித்த பெண் தன்னைப் பார்த்து நடுவிரலைக் காட்டியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் ஒரு தேசியவாதி எனக் குறிப்பிட்ட அவர், கனடா ஐரிஷ், ஸ்கொட்டிஷ் மற்றும் மேற்கத்திய கலாசாரங்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடு என்றும், கிறிஸ்தவ விழுமியங்கள் தற்போதைய சமூகத்தில் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை என்றும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், லண்டன் இமாம்கள் பேரவையின் தலைவரும் முஸ்லிம் மதத் தலைவருமான அப்துல் அல்பத்தாஹ் தவக்கல் (Abd Alfatah Twakkal), இந்தக் காணொளி தமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காணொளியில் இடம்பெறும் கருத்துகள் இனவாதம் மற்றும் இஸ்லாமிய வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது பிள்ளைகள் முன்னிலையில் இவ்வாறான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பது மேலும் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கனடாவின் தேசிய முஸ்லிம்கள் பேரவை (NCCM), நாட்டில் இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டுப்படுத்த மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அமைப்பின் பேச்சாளர் ஸ்டீவன் ஸோ (Steven Zhou) தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதற்கான தேசிய அளவிலான திட்டமொன்றை உருவாக்குவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது அமைப்புடன் கலந்துரையாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


